தமிழ்நாடு செய்திகள்

வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: கோவை- நீலகிரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-05-25 14:15 IST   |   Update On 2025-05-25 14:15:00 IST
  • கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • தென் மேற்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியிருப்பதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோன்று குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் பகுதிகளில் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கடந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பது பற்றியும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் ரத்னகிரி அருகே நேற்று கரையை கடந்து, மகா ராஷ்டிரா மாநிலத்தில் ஒரே இடத்தில் மையம் கொண்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும், கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்.

வடமேற்கு வங்ககடலில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந் தேதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக 31-ந்தேதி வரை மகா ராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.

குறிப்பாக மும்பை முதல் ரத்னகிரி வரையிலான கொங்கன் கடற்கரை பகுதி களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியான முல்லை பெரியார், சிறுவாணி, பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பதிவாகும். மேட்டூர் அணை இம்மாத இறுதியில் நிரம்பி ஜூன் முதல் வாரத்தில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட குறைந்து காணப்படும், மாலை, இரவு நேரங்களில் கடலோர பகுதி களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி, கேட்டி, கோவை மாவட்டம வால் பாறை, கேரளா மாநிலம் இடுக்கி, வயநாடு, மூனாறு, கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூர், ஹசன் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், நீர் வீழ்ச்சிகளுக்கு 31-ந்தேதி வரை பொதுமக்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, சிறு மலை, மேகமலை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News