தமிழ்நாடு செய்திகள்

விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2025-10-09 12:27 IST   |   Update On 2025-10-09 12:27:00 IST
  • தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது.
  • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

நெல்லை:

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் அ.தி.மு.க. கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும்.

திண்டுக்கல்லில் நீட் தேர்வில் மாணவி ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்னும் அதை செய்யவில்லை. இப்போது நீட் தேர்விலேயே வந்து நிற்கிறார்கள். நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைக்கும். மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

எந்த கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறுகிறார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.

வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பணி செய்து வருவதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுப்பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் த.வெ.க கொடி பா.ஜ.க. கூட்டத்தில் எப்போது பறக்கும் என்று கேட்ட கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் முத்து பலவேசம், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News