தமிழ்நாடு செய்திகள்

திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் - நயினார் நாகேந்திரன்

Published On 2025-11-03 12:20 IST   |   Update On 2025-11-03 12:20:00 IST
  • பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
  • இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை:

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என வெட்டி வசனம் பேசும் தி.மு.க.வின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று வினவியுள்ளார். 

Tags:    

Similar News