தமிழ்நாடு செய்திகள்

ராமதாசும் அன்புமணியும் சேரணும்... திமுக கூட்டணியில் இருந்து திருமா விலகணும் - நயினார் நாகேந்திரன்

Published On 2025-05-22 13:40 IST   |   Update On 2025-05-22 13:40:00 IST
  • அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.
  • ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.

நெல்லை:

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லையப்பர் கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளித்தேருக்கு பக்தர்களால் 175 கிலோவிற்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. நானும் 1 கிலோ வெள்ளி கொடுத்துள்ளேன்.

2004-ம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் கோவிலுக்கு திருப்பணி செய்ய அனுமதி பெற்று, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரியிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்-ராமதாஸ் பிரச்சனைக்கு பின்னணியில் பா.ஜ.க. இல்லை. அன்புமணிக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக கூறுவது தவறு. நாங்கள் யாருக்கு பின்னாலும் இல்லை.

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அது போலவே தங்க நகை கடனுக்கான பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டதும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும்.

என்.ஆர்.சி. என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது அல்ல. அண்டை நாடுகளில் இருந்து மேற்கு வங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News