இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன்
- தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே!
- அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.
தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா? பிகாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் துரை முருகன் வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடியபோதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பிகார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண்.
காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் 'பிரதர்' எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற
அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.
எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.