தமிழ்நாடு மீதான வெறுப்பை பா.ஜ.க. அரசு மீண்டும் நிரூபித்துள்ளது- மு.க.ஸ்டாலின்
- மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர்.
- தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். நமது மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் இந்த செயல் உள்ளது.
இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்றதாக இருந்ததில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகம் என்பதை பா.ஜ.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.