தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது.
- எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்த மருத்துவ பல் கலைக்கழகம் அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது சட்டபூர்வமான ஆய்வுகள் நிறைவடைந்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து தயாராக உள்ளது.
சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். போதைப்பொருள் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது. எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெருகி இருந்த போதை நடமாட்டம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.