தமிழ்நாடு செய்திகள்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது - வைகோ அறிக்கை

Published On 2025-11-13 19:17 IST   |   Update On 2025-11-13 19:17:00 IST
  • கர்நாடக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிற கருத்து ஏற்கத்தக்கதல்ல.
  • உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், இதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. குறிப்பாக திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில், அதற்கு அனுமதியை வழங்க ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, கர்நாடக மாநில அரசு மேகதாது அணைக்கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையில் நவம்பர் 23 ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்றம் "திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" என்றுதான் உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் மேகதாது அணைக் கட்ட உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிற கருத்து ஏற்கத்தக்கதல்ல.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கு முனைந்திருக்கிறது.

இந்திய அரசின் நீர் வள ஆணையம் எந்த சூழ்நிலையிலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News