ஒற்றை யானைக்கு பழம் கொடுக்க முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.
இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.