தமிழ்நாடு செய்திகள்

பலியான குழந்தைகள் தியா, ரிதன் மற்றும் முத்துகிருஷ்ணன்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் கரூர் தொழில் அதிபரின் குழந்தைகள், மாமனார் உயிரிழப்பு

Published On 2025-04-30 12:54 IST   |   Update On 2025-04-30 13:00:00 IST
  • பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
  • சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு (வயது 40). இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா.

இவர்களது குழந்தைகள் தியா (10), ரிதன் (3). தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். பிரபுவின் மாமனார் சென்னை அடையாறை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(61) என்பவரும் உடன் சென்றார்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நேற்று சென்னை ரெயிலில் திரும்ப திட்டமிட்டனர். அதிகாலையில் ரெயிலில் செல்லவேண்டி இருந்ததால் இரவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள 5 மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கினர்.

அப்போது குழந்தைகள், முத்துக்கிருஷ்ணனுக்கு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். இந்த வேளையில் ஓட்டலில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியானார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News