தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: 2-வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை

Published On 2025-09-29 08:33 IST   |   Update On 2025-09-29 08:33:00 IST
  • த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார்.
  • கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை ஆணைய தலைவராக இருந்தவர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்றே தனது விசாரணையை தொடங்கினார். நேற்று பகல் கரூருக்கு சென்ற அவர், முதல்கட்டமாக 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.

பிரசார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள். சம்பவ இடத்தில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்கு பிறகு விரைவில் விரிவான அறிக்கையை அவர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

Tags:    

Similar News