பரந்தூர் விமான நிலையம் அமையும் இடம் 26 சதவீதம் நீர்நிலை பகுதி- ஆய்வில் தகவல்
- பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும்.
- நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் உவகை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விதுபாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து 2023-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்க பரந்தூர் தகுந்த இடமா என்பதை கண்டறிந்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவின் நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை. சாத்தியக்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி குறித்து பல வல்லுநர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். அதில், 26.5 சதவீதம் நீர்நிலைகளாக இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும். போதுமான நீரியல் ஆய்வுகள் இல்லாமல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு அனுமதிகள் வழங்குவதையும், நிலப்பயன்பாடு மாற்றத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும். மாற்றுவழிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.