கரூரில் கூட்ட நெரிசல்: காயம் அடைந்தவர்களின் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார் நிர்மலா சீதாராமன்
- பல்வேறு கேள்விகளை உடன் இருந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவாக உள்ள அரசு அதிகாரிகளிடம் எழுப்பினார்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர்:
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இன்று கரூருக்கு வருகை தந்தனர். அவர்களுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வந்தார். அவர்கள் விஜய் பிரசாரம் நடந்த வேலுசாமிபுரத்தில் தனது ஆய்வை தொடங்கினர்.
அப்போது, பிரசாரத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? இந்த நிகழ்வு எப்படி நடந்தது? சம்பவத்தின் போது எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்? எந்தெந்த வழியாக மக்கள் பிரசார இடத்திற்கு வந்தார் கள்..? எப்படி வெளியே சென்றார்கள்? எவ்வளவு பேர் இங்கு இருந்தார்கள்?
கூட்ட நெரிசல் ஏற்பட்ட நேரம் எப்போது? கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்னவெல்லாம் இருந்தது போன்ற பல்வேறு கேள்விகளை உடன் இருந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவாக உள்ள அரசு அதிகாரிகளிடம் எழுப்பினார்.
அதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, போலீசார் தெப்போது பேரிகாடு அமைத்து சீல் வைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் பிரசாரம் நடைபெற்ற 4-வது தெரு மற்றும் அதன் எதிர் சந்து ஆகியவற்றை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
நெரிசலில் பலியான 41 பேரும் என்ன மாதிரியான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் உயிரிழந்தற்கான காரணங்கள் என்னவாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.