தமிழ்நாடு செய்திகள்

காமனூரில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்பதுகைகள் பயன்பாடு- மத்திய தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2026-01-31 13:49 IST   |   Update On 2026-01-31 13:49:00 IST
  • காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
  • தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை காமனூரில் மத்திய தொல்லியல்துறையின் மைசூர் கண்காணிப்பாளர் குமரன் தலைமையில் முதல் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

இதில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் 2500 முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்பதுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கண்காணிப்பாளர் கூறுகையில்,

தாண்டிக்குடியில் கடந்த 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலம் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் கற்திட்டை, கற்பதுகை, அறைகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் ராவத் உத்தரவின் பேரில் கற்காலம், இரும்பு காலத்திற்கு முன்பிருந்த பகுதிகள் குறித்து அகழாய்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.

காமனூரில் கற்பதுகை மூலம் நினைவுச் சின்னங்கள், ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாலி, பயன்படுத்தப்பட்ட பொருள், வாழ்க்கை முறை, கலாச்சாரம் குறித்த தடயங்கள் பற்றி அகழாய்வு நடக்கின்றது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்பதுகை சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாகும்.

இங்கு கண்டறியப்பட்டுள்ள கற்பதுகையை சுற்றி கற்களான சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே காண முடிந்தது. தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குகை ஓவியம், பாறை ஓவியம், குகை ஆதிகால மனிதர்களின் கலாச்சாரம், பெருங்கற்கால மனிதர்களின் சின்னம், வரலாற்று எச்சம் உள்ளிட்டவை குறித்து அகழாய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.

மேலும் தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம். இரும்பு காலத்திற்கு முந்தைய கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்ந்த அடையாளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன. இவை குறித்து 3 ஆண்டுகள் அகழாய்வு நடக்கும். தற்போது அகழாய்வுகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார். 

Tags:    

Similar News