கரூர் கூட்டநெரிசல்: எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை - ஆதவ் அர்ஜுனா
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
- இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று ஆதவ் அர்ஜுனா பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று வன்முறையை தூண்டும் வகையில் தெரிவித்திருந்தார்.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அதை நீக்கியும் உள்ளார்.
இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "என் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. இப்போதைக்கு நான் எதுவும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, விரைவில் மக்களை சந்திப்போம்" என்று தெரிவித்தார்.