தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயம் அடைந்தவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை

Published On 2025-11-17 09:44 IST   |   Update On 2025-11-17 09:44:00 IST
  • இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
  • சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

கரூர்:

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரம் மற்றும் கோதூர் பகுதிகளில் உள்ள உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாக சம்பவத்தில் காயமடைந்த கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த உஷா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோரின் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஒரு பெண் அதிகாரி உள்பட 3 சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. என்ன காயம் ஏற்பட்டது? எத்தனை நாள் சிகிச்சை பெற்றீர்கள்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது? கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலவிய சூழ்நிலை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

இன்று 3-வது நாளாக கூட்டம் நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

Tags:    

Similar News