தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி - டி.டி.வி.தினகரன் இன்று அறிவிப்பு?

Published On 2026-01-21 08:35 IST   |   Update On 2026-01-21 08:35:00 IST
  • கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • சென்னை அடையாறில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை:

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள்.

கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.

Tags:    

Similar News