ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை
- ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
- தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரான் கிஷ் தீவில் வசித்து வரும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இந்தநிலையில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று புதுடெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளரை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.