காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை- கமல்ஹாசன்
- தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
- ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார்.