நகைக்கடன் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் : சிறு- குறு தொழில்முனைவோர் சங்க தலைவர் கோரிக்கை
- கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
- 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-
வங்கிகள் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.
குறிப்பாக சிறு, குறு, தொழில் செய்பவர்கள் மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவை என்றால், உடனே வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள்.
தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனையும் 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையாக பாதிக்கும்.
22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் இந்த கட்டுப்பாடுகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை வையம்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.