ஜன நாயகன் விவகாரம்: விஜய் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது- சிபிஎம் சண்முகம்
- கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
- ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஜன நாயகன் வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்முகம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவிற்கு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவதை விட வேறு வேலை கிடையாது. தணிக்கை குழுவில் U/A சான்றிதழ் கொடுக்கலாம் என 4 பேர் சொல்லும்போது, ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது.
பெரும்பான்மையினர் தெரிவிக்கும் சான்றிதழ் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. இப்படி நடந்து கொண்டால் சினிமாத்துறையால் பிழைக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசு இதுபோன்ற நிர்ப்பந்தங்களை கொடுத்து விஜயை வளைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். அநீதி என்பதெல்லாம் தெரிந்து கொண்டும் ஜன நாயகன் வாயே திறக்கவில்லை. கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
மத்திய அரசின் தூண்டுதல் பேரில்தான் தணிக்கை குழு இப்படிப்பட்ட நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று சொன்னால் தனக்கு சங்கடமான, பின் விளைவுகளை ஏற்படுத்துமே என்ற காரணத்தினால் அவர் வாய் திறக்காமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.