தமிழ்நாடு செய்திகள்

பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2025-06-15 20:02 IST   |   Update On 2025-06-15 20:02:00 IST
  • காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
  • எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா? சட்டம் - ஒழுங்கை காப்பதை விடுத்து அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாகக் கூறி பூந்தமல்லி அருகில் உள்ள அவரது வீட்டிற்கு 500-க்கும் கூடுதலான காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை. இத்தகைய சூழலில் அவரை கைது செய்ய முயல்வதும், அதற்காக 500க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பியிருப்பதும் அப்பட்டமான அச்சுறுத்தல் தான்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சட்டம் - ஒழுங்கு அத்துமீறல்கள் தடுக்கப்படவில்லை. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரும் படி உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல. இந்தப் போக்கை கைவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News