த.வெ.க.வுடன் கூட்டணி என்றால் பா.ஜ.க.வை கழற்றிவிட அ.தி.மு.க. தயாராகிவிட்டதா?- திருமாவளவன் கேள்வி
- பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
- அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.
நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..
கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.
அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.
அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.
அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.