மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் பலத்த மழை- நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு
- சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
- பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்தது.
நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.
துர்கா பூஜைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் அவர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழப்புகள், சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.