ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை
- ஆனைமலை தேவிபட்டணம், சிறுமுகை, கிணத்துகடவு உள்பட 4 இடங்களில் வீடுகள் இடிந்தன.
- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்தது.
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது.
இந்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கோவை மாவட்டத்தில் மலைப்பிரதேசமான வால்பாறையில் வில்லோணி எஸ்டேட் செல்லும் ரோடு மற்றும் உருளிக்கல் எஸ்டேட் செல்லும் ரோடு, குரங்குமுடி எஸ்டேட் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் காபி தோட்டத்திற்குள் இருந்த மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபோன்று கருமலை ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வால்பாறை பகுதிக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர்(பொறுப்பு) விஸ்வநாதன், வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, தாசில்தார் மோகன் பாபு, நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வால்பாறை போலீசாருடன் சென்று கூழாங்கல் ஆற்று பகுதி, சோலையாறு சுங்கம் ஆற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவை மதுக்கரை தாலுகா பிச்சனூர் ஊராட்சி நவகரை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பழனி ரங்கன்(வயது 85) என்பவரது வீட்டுச்சுவர் இடிந்தது. இதில் வீட்டில் இருந்த பழனி ரங்கன், அவரது மனைவி ராசம்மாள்(85) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை அமைச்சர் முத்துசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது கலெக்டர் பவன்குமார், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
அந்த பகுதியில் மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பிச்சனூர் ஊராட்சி செயலாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அங்கு பழுதான நிலையில் இருந்த 27 வீடுகளில் வசித்து வந்த 92 பேரை வெளியேற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இது தவிர ஆனைமலை தேவிபட்டணம், சிறுமுகை, கிணத்துகடவு உள்பட 4 இடங்களில் வீடுகள் இடிந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 100 அடி. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து நேற்று 87 அடியாக இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் சித்திரைச்சாவடி தடுப்பணையில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. அங்கு ஆபத்தை மீறி பொதுமக்கள் குழந்தைகளுடன் தண்ணீரில் இறங்கி விளையாடி வருகின்றனர். மேலும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள சாடியாத்தா நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் கொட்டுகிறது. கோவை வின்சென்ட் ரோட்டில் அபாயகரமான நிலையில் மே பிளவர் மரம் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று அந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.
இதற்கிடையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர். ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைன்பாரஸ்ட் பகுதியில் 8-வது மைல் அருகே காரை நிறுத்தி இயற்கை காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய சூறாவளி காற்றுக்கு மரக்கிளை முறிந்து ஆதிதேவ் என்ற 15 வயது சிறுவன் மீது விழுந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
தகவல் அறிந்து வந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆதிதேவ் உயிரிழந்தான்.