ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை
- வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான்.
- கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான். கடந்த 12-ந்தேதி சனிக்கிழமையும் விடுமுறை எடுத்துவிட்டு சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.
அந்த நேரத்தில் தான் அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். மேலும் அவன், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மா பேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் இன்று காலை கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவனை வேனில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கலாம் என்று கருதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே வட மாநில வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட விவரங்களையோ போலீசார் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வாலிபரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. அது அந்த வாலிபர்தானா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு இன்று காலையிலேயே 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.