தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் த.வெ.க.வினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
- கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் தவெகவினர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில், கழகத் தோழர்கள் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வீடு வீடாகச் செல்லும் பரப்புரை, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வடிவமைப்புகள், இலச்சினைகள் அல்லது வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
முதல்வர் வேட்பாளர் அல்லது கழகத் தலைவர் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளரங்கு, பொதுவெளி மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வெடி வெடிப்பது உள்ளிட்ட அதிகப்படியான கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பொதுமக்களின் உற்ற தோழர்களாகக் கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.