விவசாயிகளுக்கு வழங்கும் கடன்களில் எவ்வித விதியும் குறுக்கீடாக இருக்கக் கூடாது- அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
- நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
- விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அடங்கல் சான்றிதழ் மட்டும் பெற்று கடன் வழங்குவது வழக்கமானது என்பதால் தமிழக அரசு விவசாயிகளின் தற்போதைய கஷ்டத்தை, நஷ்டத்தை, வருவாய் இல்லாத நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்று தெரியாது.
விவசாய நிலம், தற்காலிக குத்தகை நிலம், கோவில் நிலம், வக்பு நிலம் மற்றும் தனியார் நிலம் போன்ற பல்வேறு வகைப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் வங்கியில் நகைக்கடன், கல்விக் கடன் பெற்று அது சம்பந்தமாக நிலுவை இருந்தால் சிபில் ஸ்கோர் மதிப்பெண் கணக்கிட்டால் கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
எனவே தான் வேளாண் தொழில் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் கிடைக்க வேண்டிய விவசாயக் கடன் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உணவுக்கு வித்திடும் விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து ஆறுதல் கூறுவதை தாண்டி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளின் கடன் நிலுவை, சிபில் ஸ்கோர் மதிப்பெண் என எக்காரணத்தையும் கூறாமல், இப்பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட, கடன் பெற காத்திருக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.