புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
- புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இவர் 1980-1983 மற்றும் 1990-1991 வரை தி.மு.க. சார்பில் புதுச்சேரி முதலமைச்சராகவும் 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.