விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா?- முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பதில்
- பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர்.
- திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
தமிழக மக்கள் மனதில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எனவே நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்களால் சரியாக உழைக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உழைப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். வீடுதோறும் நிர்வாகிகள் சென்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கட்சியில் இணைக்க முயல வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்றார்.
அதன் பின் நத்தம் இரா.விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவை வைத்துக் கொண்டு தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கூறி வருகின்றனர். விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவரா? என்பதை தற்போது கூற இயலாது. அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை வைத்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறும். வருகிற தேர்தலிலும் இந்த கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார்.
பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். அப்படி இருந்தால் டாடா பிர்லா போன்ற தொழிலதிபர்கள் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று இருக்கலாம். திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர். அவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.