null
மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை... விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு..!
- 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.
- இரையுமன் துறையிலிருந்து பூத்துறை வரை பாதயாத்திரை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125-நாட்கள் வழங்குகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வரும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதேபோல கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் நடைபயணம் நடைபெற்று வருகிறது. அதே போல இன்று 9-வது நாளாக மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழக சட்டமன்ற குழு காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார்.
பாதயாத்திரை இரையுமன் துறையிலிருந்து இருந்து தொடங்கி பூத்துறை வரை நடைபெற்றது. பாதயாத்திரையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: "மத்திய பாஜக அரசுக்கு எதிராக 9-வது நாளாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை எவ்வாறு முடக்க நினைக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்த நடைபயணம் மூலம் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்கப்பார்கிறார்கள், முதலில் பயனாளிகளின் சம்பளத்தை குறைத்தனர். இதனை கண்டித்து இந்த தகவலை மக்களிடம் எடுத்து சென்று கொண்டிருக்கிறோம். வேலை கொடுக்காமல் இந்த திட்டத்தை முடக்கப்பார்கிறார்கள். இதனை முடக்க கூடாது என கேட்டு மக்களிடம் எடுத்து கூறி போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்," என்றார்.
அமெரிக்கா இந்திய ஒப்பந்தத்தை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "தலைவர் ராகுல் காந்தி கூறியது போல் இது கட்டாயத்தினால் ஏற்படுத்தபட்ட ஒப்பந்தம், வெளியுறவுத்துறைக்கு தெரியாமல் நடைபெற்றுள்ள ஒப்ந்தம் என கூறுகிறார்கள். இது கட்டாயத்தினால் ஏற்படுத்தப்பட்டது என அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
இதனால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பொருள்களை அவர்கள் இறக்குமதி செய்தால் பூஜ்யம் சதவிகிதமும், நாம் ஏற்றுமதி செய்தால் 18 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மோடியை பிரதமராக நாம் பார்கும் போது, அவர் நாட்டை கைவிடுவது போன்று தெரிகிறது," என்றார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் உறுதியாக உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, "100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 2004-ஆண்டு அன்னை சோனியாகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஐநா சபையே முன்னுதாரணமாக வரவாற்ற திட்டம் இது, மோடி அரசு இந்த திட்டத்தை சிதைக்கும் விதத்தில் 125 நாட்கள் என கூறி 30 நாட்கள் கூட வழங்கவில்லை, சம்பளம் நவம்பர் முதல் வாரத்திற்கு பின் வழங்கப்படவில்லை, அரசு நிர்ணயத்த தொகை 330, ஆனால் வழங்குவது 220 ரூபாய், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
பாத யாத்திரையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஸ், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுசெயலாளர் முகமது ஷாயித், மாநில பொது செயலாளர்கள் ஜார்ஜ் ராபின்சன், பால்ராஜ், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், முன்சிறை வட்டார தலைவர் விஜயகுமார், மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மீனவர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அந்தோணி பிச்சை, முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன்கிறிஸ்டா, மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவிசங்கர் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவ கிராம காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.