டிரோன் தாக்குதலால் கனிமொழி எம்.பி. சென்ற விமானம் மாஸ்கோவில் 45 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்ததாக பரபரப்பு தகவல்..!
- கனிமொழி தலைமையிலான குழு நேற்று ரஷியா சென்றடைந்தது.
- மாஸ்கோவை விமானம் அடைந்தபோது, டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்தது. இதில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறது.
நேற்று கனிமொழி தலைமையிலான குழு ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ சென்றபோது, டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் விமானம் சுமார் 45 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்துள்ளார். பின்னர் டிரோன் அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
கனிமொழி மற்றும் குழுவில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பாக மாஸ்கோவில் தரையிறங்கினர் என்று கனிமொழிக்கு நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் அடிக்கடி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ரஷியாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்ட தின விழா நடைபெற்றது.
இதில் பெரும்பாலான வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டு அசம்பாவிதம் நடைபெற்றால் நாங்கள் பொறுப்பல்ல என உக்ரைன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.