தமிழ்நாடு செய்திகள்

கிலோ ரூ.10-க்கு விற்பனை: 10 டன் சம்பங்கி பூக்களை ஓடையில் கொட்டிய விவசாயிகள்

Published On 2025-05-20 10:14 IST   |   Update On 2025-05-20 10:14:00 IST
  • கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
  • பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் பயிரிடப்படுகின்றன. நாள்தோறும் 5 டன் பூக்களுக்கு மேல் விளைகிறது. அவைகளை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.

சத்தியமங்கலம் , பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சம்பங்கி பூக்கள் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண சீசன் போது கிலோ ரூ.500-க்கு விற்பனையான சம்பங்கி பூக்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாயாக சரிந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.

இதனால் கடும் வேதனை அடைந்த விவசாயிகள் விரக்தி காரணமாக சம்பங்கி பூக்களை பறித்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நீரோடைகளில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பங்கி பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதை பயிரிட ஆயிரம் கணக்கில் செலவு செய்தோம். தற்போது சம்பங்கி பூ விலை கிலோ ரூ.10-க்கு சரிந்துள்ளதால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது. தற்போது 10 டன் சம்மங்கி பூக்களை பறித்து ஓடைகளில் கொட்டி அழித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறினர். மேலும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News