தமிழ்நாடு செய்திகள்

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Published On 2025-07-20 11:14 IST   |   Update On 2025-07-20 11:14:00 IST
  • மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
  • 2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும்.

திருத்துறைப்பூண்டி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை நேற்று (சனிக்கிழமை) இரவு திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திருத்துறைப்பூண்டி நகரம் குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் உள்ளது. எப்போது பார்த்தாலும் கூட்டணி..கூட்டணி.. என்று கூட்டணியை நம்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கூடியுள்ள கூட்டமும், மக்கள் முகத்தில் உள்ள எழுச்சியை பார்க்கும்போதே அ.தி.மு.க.வுக்கு வெற்றியின் அறிகுறி தெரிகின்றது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகளை கொடுத்தோம், முதியோர் உதவித்தொகையை அதிகமாக கொடுத்தோம், விவசாய தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு சரியான நேரத்தில் பணம் வந்து கிடைத்தது. ஆனால், இந்த தி.மு.க. ஆட்சியில், மு.க.ஸ்டாலின் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்றார். ஆனால், அந்த 100 நாள் வேலை திட்டம், தற்போது 50 நாளாக குறைந்துவிட்டது. வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர் நான் 100 நாள் வேலை செய்கின்ற ஏழைகளுக்கு தேவையான நிதியை விடுவியுங்கள் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் ரூ.2 ஆயிரத்து 995 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டது.

மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதையும் வாங்கினால் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் ஆகிவிடும். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். மீண்டும் அ.தி.முக. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடரும்.

இதையெல்லாம் இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள். மக்கள் பிரச்சனை வந்தால் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், இன்று தி.மு.க.வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடுவதில்லை. 4 வருடத்தில் கம்யூனிஸ்டுகள் ஏதேனும் போராட்டம் நடத்தி உள்ளார்களா? பருத்தி விலை குறைவாக சென்றதற்கு முத்தரசன் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஏற்கனவே, தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, ஆனால் நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி என்பதா?.

இந்த நியாயத்தை கேட்காமல், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் கட்சிகள் தி.மு.க.வுக்கு மத்தளம் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் அச்சம் அடைந்துவிட்டன. எங்களுக்கு தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஒன்று சேர்ந்து வருகின்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு கேட்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

எங்கள் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை போல் வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணைய உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

ஆட்சிகாலம் முடிவடைய உள்ள நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என வீடு, வீடாக தி.மு.க.வினர் சென்று வருகின்றனர். மக்களின் பிரச்சனைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார்கள். 4 ஆண்டு காலமாக இந்த பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொண்ட நீங்கள் ஏன் தீர்த்து வைக்கவில்லை? சதுரங்க வேட்டை படத்தில் சொல்வதை போல ஏழை மக்களின் ஆசையை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வர தி.மு.க.வினர் துடிக்கிறார்கள். மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி ஒரு குடும்பப் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News