தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும்- இ.பி.எஸ். உறுதி

Published On 2025-07-31 12:53 IST   |   Update On 2025-07-31 12:53:00 IST
  • அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
  • தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

ராமநாதபுரம்:

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கொள்கையுடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் முதலாவதாக சிவகங்கையில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் பரமக்குடி, திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் மீனவர்கள், நெசவாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதன்மூலம் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் தங்களது வாழ்வில் வளம் பெற்றனர்.

அவ்வாறு நடைமுறையில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது. தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மீண்டும் கொண்டுவரப்படும். அதன்மூலம் தமிழகம் பசுமையாக மாறும். நெசவாளர்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அவர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும். நலவாரியம் மூலம் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. கச்சத்தீவு மீட்பு மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவு மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தனிக்கவனம் செலுத்துவோம். மேலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்" என்று பெயரளவுக்கு மட்டும் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சனைகளை மறந்து விடுகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் நலன் ஒன்றே அரசின் குறிக்கோள் என்ற அடிப்படையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்றார். அங்கு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை எடப்பாடி பழனிசாமி ரோடு-ஷோ நடத்துகிறார்.

குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி பொது மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ள அவர் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். மேலும் பிரசார வாகனத்தின் மீது நின்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு உரையாற்றுகிறார்.

Tags:    

Similar News