மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இ.பி.எஸ். இல்லத்தில் விருந்து
- பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க. இணைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி தலைவர்கள் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு வருகை புரிந்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கிறார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் என்பது தமிழகத்தினுடைய ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற கூட்டமாக இருக்கும்.
காலை உணவு முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உங்களை சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.