தமிழ்நாடு செய்திகள்

அமித்ஷா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2024-12-19 12:18 IST   |   Update On 2024-12-19 12:26:00 IST
  • அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
  • தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். 

இதேபோல், அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ராமநாதபுரம் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News