சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. தலைவரை கன்னத்தில் அறைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர்
- தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
சேலம்:
சேலம் மாநகராட்சி அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றுவது, வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில் வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளன .ஆனால் எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதனால் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுஹாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியை கையால் தாக்கினார். தொடர்ந்து கன்னத்திலும் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து யாதவ மூர்த்தியை தி.மு.க. கவுன்சிலர் முருகனும் பிடித்து தள்ளினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் தி.மு.க. கவுன்சிலர் சுகாசினியை தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதற்கு இடையே கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து யாதவமூர்த்தி கூறுகையில், ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறோம். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். இந்த நிலையில் 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
இதனால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.