தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது- திருமாவளவன்

Published On 2025-07-07 15:00 IST   |   Update On 2025-07-07 15:00:00 IST
  • ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி.
  • அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். திராவிட அரசியலில் முன்னோடி, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது.

தேர்தல் களப்பணிகள் விடுதலை சிறுத்தைகள் முதன்மையானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும்போது அதனை தீவிரப்படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது.. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்எல்ஏ, தலைமை நிலைய செய லாளர் பாலசிங்கம், பாவலன், சேகுவாரா, மேலிட பொறுப்பாளர்கள் செல்லத்துரை, இரா. செல்வம், மாவட்டச் செயலாளர்கள் சேத்துப்பட்டு இளங்கோ, கரிகால் வளவன், சௌந்தர், வக்கீல் அப்புனு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News