தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்தாரா அமைச்சர் ராஜகண்ணப்பன்?

Published On 2025-05-14 18:29 IST   |   Update On 2025-05-14 18:43:00 IST
  • ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நாளை முதல் (15ம் தேதி) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.

மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தனர். 

அங்கு, தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.93 கோடி மதிப்பிலோன 32 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. அவரது துறை சார்ந்த முக்கிய நிகழ்வில் கூட ராஜகண்ணப்பன் பங்கேற்காதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இலாகாக்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடித்து வரும் ராஜகண்ணப்பன், முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜகண்ணப்பனும், சர்ச்சையும்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணியாற்றிய ராஜேந்திரன் என்பவரை தனது வீட்டிற்கு வரச்சொன்ன அமைச்சர், அங்கு அவரை அவரது ஜாதியைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறையில்லை. தீபாவளிக்கு முன்பாக, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் பதவியில் இருக்கும் ராஜகண்ணப்பன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், முதல்வர் கோப பார்வையில் இருந்து தப்ப முடியாது என பலரும் கருதினர்.


ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சர்ச்சையில் சிக்கியும் ராஜகண்ணப்பனுக்கு இலாகா மட்டுமே மாறி வருகிறது. அதை மீறி எந்தவித நடவடிக்கையும் அவர் மீது இல்லை.

இது ஒருபுறம் இருக்க.. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பங்கேற்காதது திமுகவின் சீனியர் அமைச்சர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜகண்ணப்பன் வரலாறு..!

தனது அரசியலின் ஆரம்பக்கட்டத்தில் அதிமுகவில் இருந்தவர் ராஜகண்ணப்பன். 1991ம் ஆண்டு அதஇமுகவில் இருந்தபோது திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991- 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

பிறகு, மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கிய ராஜகண்ணப்பன். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006ம் ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.

2009ம் ஆண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலக மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தோல்வியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் திமுகவில் இணைந்தார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு 1,01,901 வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

2021ம் ஆண்டு மே 7ம் தேதி அன்று போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

பிறகு, 2022ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் வனத்துறை மற்றும் காதி துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tags:    

Similar News