டெல்லி குண்டு வெடிப்பு: காங்கிரஸ் மீது பொன் ராதாகிருஷ்ணன் அவதூறு - விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்
- பொன். ராதாகிருஷ்ணன் இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது
- நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும்.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பியதற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்.
பொன். ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது மற்றும் நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும்.
டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் இந்த வேளையில் பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை.
இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக் குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டி காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழி சுமத்திய பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது.
தேசத்திற்காக நாம் ஒன்றிணைவோம். மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட துடிக்கும் சக்திகளை அடையாளம் காண்போம். நாட்டு மக்கள், உண்மையை அறிந்துள்ளனர். அவர்கள் இந்த மலிந்த அரசியல் நாடகங்களை தள்ளுபடி செய்து, வெறுப்பை விதைக்க முயல்கின்ற சக்திகளுக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.