மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காட்சி.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
- தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.
- 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் சாரல் மழையால் அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அம்பை, ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்த நிலையில் இன்று 3½ அடி உயர்ந்து 123.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 401 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 139.50 அடியை எட்டி உள்ளது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95.62 அடியாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இன்று 3-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நாலுமுக்கு எஸ்டேட்டில் 2-வது நாளாக 7 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 66 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 58 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.
குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க நேற்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் சீற்றம் குறையவில்லை. இதனால் இன்று 8-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். அதே நேரம் புலியருவி மற்றும் சிற்றருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
அணைகளை பொறுத்தவரை 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2½ அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து 25 கனஅடிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் 2 அடி நீரே தேவைப்படுவதால் அணை இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது. அணை நீர் இருப்பு இன்று 3 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையில் நேற்று 59.71 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 61.35 அடியாக உள்ளது. குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகிறது. அதிகபட்சமாக குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டரும், அடவி நயினார் அணையில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.