ரெயில்வே கேட் திறந்தே இருந்தது.. கேட் கீப்பரை பார்க்கவில்லை - விபத்தில் காயமடைந்த மாணவன்
- வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
- விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்திற்கு கேட் கீப்பரின் அலட்சிமான நடவடிக்கையே காரணம் என கூறி பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். இதையடுத்து கேட் கீப்பரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்ற போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநர் தான் காரணம் என்றும் கேட் கீப்பர் கேட்டை மூட்டத் தொடங்கியது போது, வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சங்கரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறிகின்றனர் என கேட்டதற்கு அவர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் விபத்து குறித்து கேட்டதற்கு, கேட் திறந்தே இருந்ததால் தான் பள்ளி வேன் கிராஸ் செய்தது என்றும், ரெயில் ஒலியும் எழுப்பவில்லை என்றும் கூறினார். மேலும் கேட் கீப்பர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.