தமிழ்நாடு செய்திகள்

கொடநாடு காட்சி முனையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2025-09-29 11:04 IST   |   Update On 2025-09-29 11:04:00 IST
  • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
  • சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊட்டி:

தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், பைக்காரா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்த மலர்களை கண்டு ரசித்து அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். தாவரவியல் பூங்கா புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்தனர். நேற்று மதியம் ஊட்டியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அங்கு வந்தவர்கள், கொடநாடு காட்சி முனையில் இருந்தவாறு, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், வண்ணமயமான பள்ளத்தாக்குகள், மாயார் நதி, பவானி அணை, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் நேற்று காலை முதல் சோதனைக்காக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

கூடலூர், நடுவட்டம், பைக்கார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சமவெளிப்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி கூடலூர், ஊட்டி கோத்தகிரி, ஊட்டி குன்னூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News