தமிழ்நாடு செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Published On 2024-12-14 10:42 IST   |   Update On 2024-12-14 14:17:00 IST
  • கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை மரணமடைந்தார்.
  • இளங்கோவன் மரணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்திருப்பதாகவே கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 75 வயதான இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்தவர். எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

இதற்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரிக்கு அவர் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று ஏற்பட்டு கடுமையான மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இளங்கோவன் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவரது உடல்நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மியாட் ஆஸ்பத்திரி டாக்டர்கள் செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இளங்கோவன் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்ததுடன் உயரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை மரணமடைந்தார். ஆஸ்பத்திரியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மியாட் ஆஸ்பத்திரி முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததை கேட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகவும் துணிச்சலாக கருத்துக்களை தெரிவிப்பவராக இருந்து வந்தார். அவரது பேச்சுக்கள் பலமுறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இருப்பினும் தனது கருத்துக்களை எந்த நேரத்திலும் யாருக்கும் பயப்படாமல் எடுத்து வைப்பவராகவே அவர் விளங்கி வந்தார்.

இதனால் அவரது மரணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்திருப்பதாகவே கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இளங்கோவன் போட்டியிடாமல் விலகியே இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது மகன் திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டமன்ற கூட்டங்களிலும் அவரது தொகுதி பிரச்சனைகள் பற்றி பேசி வந்தார். இது போன்ற சூழலில்தான் இளங்கோவன் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News