தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி நடக்கிறது: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
- கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.
திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.
மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.
அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?
அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.
கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.