வருகிற 22, 23-ந்தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.
- 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22 மற்றும் 23-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 22-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருப்பூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
அதை தொடர்ந்து கோவில் வழி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் மதிய ஓய்வுக்கு பிறகு மாலை திருப்பூரில் இருந்தும் புறப்பட்டு மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நடைபெறும் ரோட் ஷோவிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு உடுமலையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந்தேதி காலை உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.
அதை தொடர்ந்து, நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் பிறகு கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சி வட்டம் பொதுப்பணித்துறை நீர்வள தலைமை பொறியாளர் அலுவலகத் தில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நடைபெற காரணமாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, விவசாய மக்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 1348 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.