தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-04-26 12:37 IST   |   Update On 2025-04-26 14:30:00 IST
  • ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
  • தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை:

முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தியும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.

எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதம் ஒன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஏற்கனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News