ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் மிரட்டிய காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாரின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
* ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.
* அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு அரசு பணி வழங்கப்படும்.
* அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.