நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
- நீலகிரிக்கு சென்றுள்ள முதலமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்றுள்ளார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு சென்றார்.
நீலகிரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.